Jul 25, 2016

நெடுஞ்சாலை அனுபவங்கள் 1

நீர், நிலம், ஆகாயம் என பல வழிகளில் மனிதன் பயணங்கள் செய்ய பல விஷயங்கள் கண்டுபிடித்துள்ளான். வழிகள் மாறலாம், பயணங்கள் ஒன்றே. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பயணங்கள்பற்றிய தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும், அந்த வகையில் எனக்குத் தனியாக பைக்கில் நெடுஞ்சாலையில் தொலைதூரம் செல்வது மிகவும் பிடித்தமானது. அந்த அனுபவத்தில் கிடைத்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள மற்றும் இவ்வழிப்பயணங்களில் உள்ள  நிறை குறைகளை, எனது பயணங்களில் பெற்ற அனுபவத்தினை வைத்து தெளிவுபடுத்தவும் இக்கட்டுரை.

அலுவலக வேலை, உறவினர் வீட்டு விழாக்கள், நண்பர்களின் திருமணம் இதுபோன்ற  எந்த ஒரு கடமைக்காகவும் இல்லாமல் இந்த நொடி கிளம்பி உங்களால் தனியாக ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம் உங்களது பைக்கில் பயணம் சென்றுவர  இயலுமா? அல்லது அப்படி ஒரு பயணம் செய்ய விருப்பமா? மகிழ்ச்சி, இது உங்களுக்கான பதிவு.

ஆண், பெண் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பணிச்சுமை, குடும்பச்சுமை என  கலந்து கட்டி அடிக்கும் இக்காலகட்டத்தில், பலருக்கு ஓய்வு, நிம்மதி, மகிழ்ச்சி, உற்சாகம் என்பது வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது. ஷாப்பிங் மால், தியேட்டர், கடற்கரை, பூங்கா, கோவில், ஆன்மீக சொற்ப்பொழிவு  என்று எவ்வளவோ விஷயங்கள் அவரவர் கவனத்தை ஈர்க்க இருந்தாலும், நாம் பார்க்கப்போகும் "நெடுஞ்சாலை அனுபவங்கள்" பகுதியில் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் உங்களது வாழ்வில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

தனியாக ஒரு தொலைதூர சாலைப்பயணம் உங்களது செயல்களை இன்னும் நேர்த்தியாக்க உதவலாம். உங்களது தனிமையை போக்கலாம், உங்களது தன்னம்பிக்கையை கூட்டலாம், முன்னிலும் உங்களை மலர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவலாம். ஒரு குழுவாக செல்லும் தொலைதூர சாலை பயணத்தில் உங்களது குழு உணர்வு இன்னும் மேம்படலாம், சக மனிதர்களை அரவணைத்து செல்லும் பக்குவம் கிடைக்கலாம். 

ஏசி பஸ், ஏசி ட்ரெயின், பிலைட்'னு   அவனவன் பறந்துகிட்டு இருக்கிறான், இப்ப வந்து நானூறு, ஐநூறு கிலோமீட்டர் பைக்குல எவன் அப்டியே உக்காந்தமேனிக்கே போவான். மழை, வெயில், குளிர், பெட்ரோல் தீந்து போச்சுன்னா அட அதுகூட பரவால்ல, திடீர்னு அத்துவான காட்டு வழியில பஞ்சர் ஆச்சுன்னா?! நெனைக்கறப்பவே உதறுதுப்பா... என் நண்பர்கள் என்றில்லை பலபேருடைய எண்ணங்கள் இப்படியே உள்ளது. அவர்கள் கூறிய விஷயங்கள் யாவையும் நடக்காதென்பது உறுதியில்லை, நடந்தும் இருக்கிறது.  இருந்தாலும் பயணங்கள் தொடரும்.  

நண்பர்கள் பலபேர் நினைப்பதுபோல இது ஒரு ரோபோ சவாரி கிடையாது. பைக்கில் ஏறி உக்காந்து ஆக்சிலேட்டரை திருவிகிட்டே இருக்கும் விஷயம் கிடையாது. எனது அனுபவத்தில் ஒவ்வொரு பயணங்களிலும் ஏதேனும் அனுபவங்கள் உங்களது வாழ்வில் மறக்கமுடியாத வகையில் இருந்தே தீரும். 

ஒரு நீண்ட நெடுஞ்சாலை. தனிமையான பயணம், சாலைகளின் ஓரத்தில் சின்னஞ்சிறு கிராமங்கள், புதிய வட்டார மொழிகள், பழக்கவழக்கங்கள். பாதுகாப்பிற்கு உத்தரவில்லாத வேகத்தில் பறக்கும் வாகனங்கள், பல பெட்ரோல் பங்க்குகள், பற்பல 'கும்பகோணம் டிகிரி காப்பி'க்கள், சில தாபாக்கள்,  சொற்ப 'காபி டே'க்கள், டீ ஐந்து ரூபாய்க்கு விற்கும் சாதா டீ கடைகள் , டீ ஐம்பது ரூபாய்க்கு விற்கும் ஸ்பெசல் சாதாக்கடைகள், கடவுள்  பெயர்களோடு இருக்கும் சைவ உணவகங்கள், ஊர்களின் பெயர்கள் கொண்ட அசைவ உணவகங்கள். அரசாங்க பேருந்துகள் மட்டுமே நின்று பர்ஸையும், வயிற்றையும் பதம் பார்க்கும் உணவகங்கள், பர்ஸை மட்டுமே பதம் பார்க்கும் உயர்தர உணவகங்கள், இரு சக்கர மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்கள் தவிர மற்ற வாகன ஓட்டிகளை சோதிக்கும் சுங்கச்சாவடிகள் என பல அனுபவங்களுக்கு தீனி போடும் விஷயங்கள் அனைத்தையும் கடக்கவேண்டிய பயணம், இந்த நீண்ட பயணம். 

பயணங்கள் தொடரும்... 

No comments:

Post a Comment