Feb 25, 2015

பயணம் (சிறுகதை)



ஏம்பா வழியில நிக்குற?  கோபுரத்தை பார்த்துகொண்டிருந்த நான் கேள்வி வந்த திசையில்  பார்த்தேன். முதியவருக்கு எழுபது  இருக்கும். சராசரி உயரம். மார்புவரை தாடி. சிக்கு பிடித்த தலை. விட்டேத்தியான பார்வை, அதில் சிறிது கனிவு இருப்பதுபோல் ஒரு உணர்வு. சன்னதி தெரு ஹோட்டலில் சிற்றுண்டி முடித்து வாசலில் நிற்கும் நான் ஒருமுறை என்னை சுற்றி பார்த்துக்கொண்டேன். நூறடி சாலையின் அருகிலுள்ள நடைபாதையில்  நிற்கும் எனக்கு புரியவில்லை, இன்னும் இரண்டுபேர் வந்தாலும் தாராளமாக கடந்து செல்லலாம். அப்படி இருக்க  ஏன்  இந்த கேள்வி? மீண்டும் அவரிடமிருந்து அதே கேள்வி. ஏம்பா வழியில நிக்குற? அவர் தோற்றத்தை பார்த்து விலகிட தோன்றினாலும் உள்ளுணர்வு நகர மறுத்தது. இருந்தாலும் மெல்ல உடம்பை குறுக்கிக்கொண்டு நீங்க போங்க என்றேன். தம்பிக்கு வெளியூரா என்றார்  மெல்லிய புன்முறுவலுடன். கொஞ்சம் சகஜநிலைக்கு வந்தேன். ஆமாங்க ஐயா, மெட்ராஸ். நீங்க எந்த ஊர் என்ற என் கேள்வியை முடிக்கும்முன் தரிசனம் முடிஞ்சுதா இல்ல இனிமேல்தானா என்றார். இல்லங்க, நடை சாத்திருக்கும் அதான் டிபன் முடிச்சுட்டு போகலாம்னு வந்தேன். பதில் சொல்லாமல் வரிசையாக மூன்று கேள்வி. என் அக்கவுண்டண்ட் மனது கணக்குபோட்டது. முடிஞ்சுதா என்றார். முடிஞ்சுதுங்க நீங்க சாப்டிங்களா என்பதற்குள்  வாங்க போவோம் நானும் கோயிலுக்குத்தான் போறேன். அவரிடம் இனி கேள்வி ஏதும் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். 

பரபரப்பில்லாத சாலை. கடந்து செல்லும் சில வாகனங்கள். வெளியூரிலிருந்து வந்திருக்கும் பக்தர்கள் என அமைதியான காலை வேளை . மெதுவாக நடந்துகொண்டே, தம்பி எவ்ளோ நாளா வந்துகிட்டு இருக்கீங்க கோயிலுக்கு? முப்பது வருஷமா வரேன். வருஷத்துக்கு மூனுதடவ கண்டிப்பா வந்துடுவேன். இங்க வந்த முதல் வருஷம் பேங்க்ல வேலை கிடைச்சுது. அடுத்த வருஷம் திருமணம் பிறகு ஒரு  பெண் குழந்தை. இது என்ன! ஒரு கேள்விக்கு என்னுடைய விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறேனே! ஏனோ தெரியவில்லை இவரிடம் பேசிகொண்டிருப்பது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

ரொம்ப வருஷமா வந்துகிட்டு இருக்கீங்க, எதுவும் மாறுதல் தெரியுதா உங்களுக்கு? மறுபடியும் கேள்வி. இந்தமுறை அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏதோ ஒன்றை சாதித்த விஷயத்தை பகிர்ந்துகொள்ளும் ஆவல் தொற்றிக்கொண்டது. சிறிது தற்பெருமையும் சேர்ந்துகொண்டது. என்னுடைய புத்திசாலித்தனம், நான் கற்றுகொண்ட விஷயங்கள், தொழிலின் மீது கொண்டுள்ள ஆர்வம், வாழ்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சமுதாயத்தில் எனக்குள்ள மரியாதை, கடவுளின் மீது கொண்டுள்ள பக்தி, வரும் வருமானத்தில் சிறிய பகுதியை கொண்டு சில ஆதரவற்றவர்களுக்கு செய்துகொண்டுள்ள உதவி,  பிறந்தது முதல் விவரம் தெரிந்தவரையில் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் அவரிடம் சொல்லியாகிவிட்டது. ஏனோ தெரியவில்லை இதற்குமுன் இல்லாத ஒரு திருப்தி மனநிலை உணர முடிந்தது. அடுத்த கேள்வி என்னவாயிருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கே என்னைப்பற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும் ஆர்வமாக அவருடைய முகம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நல்லபடியா எல்லாம் முடிச்சுட்டீங்க, வேற என்ன பண்றதா உத்தேசம். 

வேற என்னங்க இருக்கு. அப்டியே கோவில், குளம்னு போய்கிட்டு இருக்கற காலத்துல புண்ணியத்த சேத்துட்டு போகவேண்டியதுதான். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் இந்த கடைசி பதிலில் பாதி குறைந்திருந்தது என்னவோ உண்மைதான்.

பின்ன ஏம்ப்பா வழியில நின்னுக்கிட்டு இருக்க?

மறுபடியும் முதலில் கேட்ட கேள்வி. சிறிது பரிட்சயம் கொடுத்த தெம்பில், அதாங்க கோயிலுக்கு போய்கிட்டு இருக்கேன் உங்ககூட என்றேன் சிரிப்புடன்.

ஆனால் அவர் சிரிக்கவில்லை. கோயில்ல என்ன இருக்கு, அங்கபோய் என்ன பண்ணுவ?

கடவுள் இருக்கு கும்பிடுவேன்.

கடவுள் இருக்காரா?


ஒரே ஒரு வார்த்தையில் கேள்வி. கேள்வி சிறியதுதான். பதில் எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அல்லது பதிலே தெரியவில்லை. கடவுள், வேதாந்தம், ஆத்தீகம், தியானம், இறைநிலை என்று இன்னும்  பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இந்த நேரடியான கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. கடவுள் இருக்காரா சார் என்று கேட்ட அலுவலக நண்பரிடம் இருபது நிமிடம் பேசமுடிந்தது. பிறகு என்னைபற்றி ஆச்சரியமாக அவர் மற்றவரிடம் பேசிய விஷயங்கள் கேள்விப்பட்டு சந்தோஷப்பட முடிந்தது. மற்றவருக்கில்லாத எதோ ஒரு தனித்தன்மை எனக்குள் இருப்பதாக நம்ப ஆரம்பித்த நேரம் அது. ஆனால் இவரிடம் வெற்று பிரசங்கம் உதவாது. தெரியாதவர்களிடம் காட்டிய சாதூரியம் இந்த சாதுவிடம் செல்லுபடியாகும் என்று தோன்றவில்லை. பாரட்டுகளையே கேட்டு பழகிய எனக்கு இப்படி பதில் இல்லாமல் தவிப்பது சிறு கோபத்தை கொடுத்தது. கடவுள் உண்டு, அதை நம்புவது அவரவர் விருப்பம் என்று பொத்தாம்பொதுவாக ஒரு பதிலையும் சொல்ல மனம் வரவில்லை. உத்தியோக மூளை பலவாறாக யோசித்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.


இருக்கிறார் என்றேன்.



அந்த சிலையை சொல்றிங்களா தம்பி?


அருவ வழிபாட்டின் ஆரம்ப நிலை உருவ வழிபாடுங்க ஐயா என்றேன். 

ஆனா பலபேர் ஆரம்பநிலையிலேயே இருக்குறாங்க தம்பி. இக்கரையிலிருந்து அக்கறைக்கு போறதுதான் எல்லாருடைய நோக்கம். சிலபேர் பரிசல்ல பயணம் பண்றதோட முடிச்சுகறாங்க. சிலபேர் பரிசல் எங்க இருக்குன்னு தேடியே காலத்த வீனாக்கிடறாங்க. சிலபேர் நடுவில் உள்ள மண் திட்டுகளில் நின்றுகொண்டு தொட்டுவிட்டதாக மார்தட்டுகிறார்கள். கரையை தொட்ட சிலபேர் இன்னும் கொஞ்சநேரம் பயணம் செஞ்சுருக்கலாமேன்னு கவலைபடறாங்க. தம்பி எந்த ரகம்?

கேள்வியில் சிறிது கேலி இருந்தாலும், சட்டென சிலருக்கு புரியாத விஷயம். இதுவரை நான் செய்த விஷயங்கள் அனைத்தும் மனதில் ஓடியது. இதுவா நான், இதற்காகவா பிறந்தோம், இதற்காகவா இவ்வளவு ஓட்டம். கடவுள் பக்தியைக்கூட ஒரு அலங்கார பொருள்போல் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறோமே என்ற நிஜம் உரைக்க சில நிமிடங்கள் ஆனது. தொண்டை குழியில்  எதுவோ அடைத்த உணர்வு. சில நிமிட மௌனத்திற்கு பிறகு கூறினேன் நா தழுதழுக்க எனக்கு இன்னும் கரை கண்ணுக்கு தெரியலங்க ஐயா. 

நின்றார், மெல்ல திரும்பி கனிவுடன் என் முகம் பார்த்து, அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல தம்பி.  தெரியவில்லை என்று ஒற்றுக்கொள்வதே தெரிந்துகொள்வதர்க்கு முதல் படி. பயணம் செய்யுங்கள், வழியில் நிற்காதீர்கள். பயணம் முக்கியம் கரையை அடைய. வாழ்க. அவர் நடப்பதை தொடர்ந்தார்.

நான் அப்படியே அசைவற்று நின்றுகொண்டிருந்தேன். உடல் முழுவதும் ஒரு அதிர்வு தெரிந்தது. இவ்வளவு காலம் வழியில் நின்றது புரிந்தது. சிறு பயணத்தில் ஒரு பாடம். இதுவரை கடவுளைபற்றி எனக்கு போதிக்கப்பட்ட விஷயங்கள், நான் படித்து தெரிந்துகொண்ட விஷயங்கள். இதுவரை என்னை முன்னிறுத்தி செய்த தானதர்மங்கள், பூஜை புனஸ்காரங்கள் அனைத்திலும் ஒரு போலித்தன்மை ஒட்டிக்கொண்டிருந்தது விளங்கியது. இன்னும் பரிசலில்கூட ஏறவில்லை என்று  புரிந்தது.

தொலைவில் அவரின் உருவம் சிறியதாக தெரிந்தது. தொடரலாமா என்று யோசித்தேன். இல்லை இதுபோதும். பயணத்தை தொடரவேண்டும். எதை நோக்கி? கோவிலுக்கு சென்று முதல் வரிசை தரிசனம் பெற்று ஏ கிளாஸ் தரிசனம் என்று மற்றவர்களிடம் பெருமையாக சொல்லி... போதும் போதும் இந்த நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.அவர் சென்ற திசை நோக்கி விழுந்து நமஸ்கரித்தேன். வந்த வழி திரும்பினேன் இனி பயணம் எவ்வழி என்பது புரிந்துபோயிற்று. 


எழுத்து 
ஜெய்காந்த் ரா.
(25-02-2015)

அறிமுகம்

நண்பர்களுக்கு வணக்கம், இத்தளத்தை எனக்கு விருப்பமான விஷயங்களை பகிர உருவாக்கியுள்ளேன். கதைகள், கட்டுரைகள், பயணங்கள் பற்றிய அனுபவங்கள் மற்றும் பல விஷயங்களை என் நடையில் பகிர்ந்துகொள்ள இத்தளம் உபயோகப்படுமென நம்புகிறேன். என்னுடைய "பயணம்" என்ற சிறுகதையுடன் இனிதாக இன்று ஆரம்பிக்கிறேன். நன்றி.

அன்புடன்
ஜெய்காந்த் ரா.

முகபுத்தக முகவரி: ஜெய்காந்த் ரா.